சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில், தொழிலதிபர் ஒருவரின் குடும்பத்தினரை அச்சுறுத்தி, அவரது மனைவியின் அந்தரங்க வீடியோவை சமூக வலைதளங்களில் கசியவிட்ட குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஊழியர்கள் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் போக்குவரத்து தொழில் செய்து வரும் தொழிலதிபர் ஒருவர், தனது கணக்கு வழக்குகளைப் பராமரிக்க சில இளைஞர்களைப் பணியமர்த்தியிருந்தார். அதில் நிதி முறைகேடுகள் நடந்ததை அடுத்து, அந்த ஊழியர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர்.
வேலையிலிருந்து நீக்கப்பட்ட ஆத்திரத்தில், முன்னாள் ஊழியர்கள் தொழிலதிபரின் குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும், அந்தத் தொழிலதிபரின் மனைவி மற்றும் அவரது மைத்துனர் சம்பந்தப்பட்ட அந்தரங்க வீடியோவைக் கைப்பற்றிய அக்கும்பல், அதை வைத்து குடும்பத்தினரை மிரட்டத் தொடங்கியுள்ளது.குடும்பத்தினரைச் சாதி ரீதியாக இழிவுபடுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததுடன், அந்த அந்தரங்க வீடியோவை சமூக வலைதளங்களிலும் பரப்பியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
பாதிக்கப்பட்ட தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த மஸ்தூரி காவல்துறையினர், தீவிர விசாரணைக்குப் பிறகு அச்சுறுத்தலில் ஈடுபட்ட 3 முன்னாள் ஊழியர்களையும் கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்தனர். அந்த வீடியோ எவ்வாறு எடுக்கப்பட்டது, அதில் வேறு யாருக்கேனும் தொடர்பிருக்கிறதா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
“ஒருவரின் அனுமதியின்றி அவரது தனிப்பட்ட புகைப்படங்கள் அல்லது வீடியோக்களைப் பதிவிடுவதும், பரப்புவதும் கடுமையான குற்றமாகும். இதுபோன்ற அந்தரங்க வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்வதைத் தவிர்த்து, உடனடியாகக் காவல்துறையிடம் புகாரளிக்க வேண்டும்” எனப் பொதுமக்களுக்குக் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
