உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் உள்ள சுங்கச்சாவடியில், போக்குவரத்து நெரிசல் குறித்து கேள்வி கேட்ட வழக்கறிஞர்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் மீது சுங்கச்சாவடி ஊழியர்கள் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேலும் நவீன் சிங் என்ற நபர் அங்கிருந்த போக்குவரத்து நெரிசலுக்கான காரணத்தைக் கேட்டபோது, ஊழியர்கள் அவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதோடு, இரும்புத் தடிகள் மற்றும் லத்திகளால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதனைத் தடுக்க முயன்ற வழக்கறிஞர் ஆர்த்தி பாண்டே மற்றும் கிரிமா சிங் ஆகியோரும் காயமடைந்தனர்.

“>

இந்த காயமடைந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்கறிஞர் ஆர்த்தி பாண்டே அளித்த புகாரின் பேரில், ராபர்ட்ஸ்கஞ்ச் போலீசார் சுங்கச்சாவடி ஊழியர்களான ராம்ஜி திவாரி, சர்வேஷ் யாதவ் மற்றும் அடையாளம் தெரியாத எட்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் தாக்குதலின் போது ஊழியர்கள் பெண்களைத் தள்ளிவிட்டு அவமானப்படுத்தியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளனர்.