டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை மாற்றும் திட்டம் இல்லை எனவும், 90 எம்.எல் பாட்டில் விற்பனை செய்வது தொடர்பாக அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை எனவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்..

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் முத்துசாமி,  வழக்கம் போல நண்பகல் 12 மணிக்கு திறக்கப்படும் டாஸ்மாக் இரவு 10:00 மணி வரை மட்டுமே செயல்படும். டாஸ்மாக் விற்பனை நேரத்தை மாற்றுவதற்கு  வாய்ப்பே இல்லை. தற்போது உள்ள நேரமே தொடரும்.. டாஸ்மாக் செயல்படும் நேரம் தொடர்பாக சிலரின் கவலைகளை மட்டுமே நேற்று பகிர்ந்து கொண்டேன். டாஸ்மாக்கை காலையில் திறக்கும் திட்டம் எதுவும் தமிழ்நாடு அரசிடம் இல்லை என்று விளக்கமளித்துள்ளார்.

மேலும் 90 எம்.எல் பாட்டில் விற்பனை செய்வது தொடர்பாக அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை. 90எம்எல் மதுபான பாக்கெட் விற்பனை தொடர்பாக கருத்து மட்டுமே கேட்கப்பட்டு வருகிறது. பாட்டிலுக்கு ரூபாய் 10 கூடுதலாக வாங்குவது எல்லா கடைகளிலும் நடைபெறவில்லை. டாஸ்மாக்கில் 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பது  இங்கொன்றும் அங்கொன்றுமாய் தான் நடைபெற்று வருகிறது.

பாட்டிலுக்கு ரூபாய் 10 கூடுதலாக வாங்குவது பெரும்பகுதி தடுக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது, பணி முடிந்தால் தவறுகள் குறையும். டாஸ்மாக் ஊழியர்களின் பிரச்சனையை தீர்க்க உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.மது குடிப்போர் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம் என தெரிவித்தார்.