சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி உள்ள மாவீரன் படத்தை வெளியிட தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் அதிதி சங்கர் நடிப்பில் வரும் 14ஆம் தேதி வெளியாக உள்ளது மாவீரன் திரைப்படம். மடோன் அஸ்வின் இயக்கியுள்ள இந்த படத்தின் ட்ரெய்லரில் காட்டப்படும் கட்சி, வேஷ்டி துண்டு ஆகியவை ஐஜேகே கட்சியை குறிக்கும் வகையில் உள்ளதால் காட்சிகளை நீக்க வேண்டும் என இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயசீலன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதாவது, ட்ரெய்லரில் காட்டப்பட்டுள்ள பல வண்ண அடுக்குக் கொடி ஐஜேகே கொடியை ஒத்துள்ளதால் மக்கள் மத்தியில் தவறான பிம்பத்தை விதைக்கும் என மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது,சென்னை உயர்நீதிமற்றம், இந்திய ஜனநாயக கட்சியின் கொடியை பிரதிபலிக்காத வகையில் மாவீரன் பட காட்சிகளை மாற்ற வேண்டும். படத்தில் எந்த அரசியல் கட்சியையும் குறிப்பிடவில்லை என 40 வினாடிக்கு பொறுப்பு துறப்பு போட்டபின் திரையரங்கில் வெளியிடலாம். படத்தில் இந்திய ஜனநாயக கட்சி கொடி இடம் பெறும் காட்சிகளில் கொடி நிறத்தை மாற்றிய பின்னர் வெளியிட வேண்டும்.

கொடியின் நிறத்தில் மாற்றங்களை செய்த பின்னரே ஓடிடி மற்றும் சாட்டிலைட் சேனல்களில் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயசீலன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம்இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.