ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் ஆடவர் ஹாக்கி அணி, அந்நாட்டு ஹாக்கி கூட்டமைப்பின் நிதி மேலாண்மைத் தவற்றால் கடும் அவமதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

சிட்னி மற்றும் கேன்பெர்ரா நகரங்களில் தங்குவதற்கு ஹோட்டல் கட்டணங்களை பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பு முறையாகச் செலுத்தாததால், முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டு வீரர்கள் சுமார் 12 மணி நேரம் வீதிகளில் அலைக்கழிக்கப்பட்டனர்.

இந்த இக்கட்டான சூழலில், தங்குவதற்குச் சரியான இடமின்றித் தவித்த வீரர்கள், தாங்கள் தங்கியிருந்த தற்காலிக இடங்களில் கழிப்பறைகளைச் சுத்தம் செய்ததோடு, தாங்களாகவே உணவு சமைத்து பாத்திரங்களையும் கழுவ வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். போதிய ஓய்வு மற்றும் மன உளைச்சல் காரணமாகப் பங்கேற்ற நான்கு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி தோல்வியைத் தழுவியது.

“நாட்டின் மானத்தைக் காக்கப் பொய் சொன்னேன்” – லாகூர் விமான நிலையத்தில் கேப்டன் காட்டம்

தோல்வியுடன் நாடு திரும்பிய பாகிஸ்தான் வீரர்களை வரவேற்க அதிகாரிகள் யாரும் வராதது வீரர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

லாகூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அணியின் கேப்டன் அம்மாத் ஷகீல் பட், ஆஸ்திரேலியாவில் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை உறுதிப்படுத்தினார். முன்னதாக, நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கக் கூடாது என்ற நோக்கில் “அனைத்தும் நலமாக உள்ளது” எனத் தாம் வெளியிட்ட வீடியோ பொய்யானது என்றும், நிர்வாகத்தின் அழுத்தத்தாலேயே அவ்வாறு பேசியதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.

“தொண்டை வறள பாத்திரங்களைக் கழுவிவிட்டு, கழிப்பறையைச் சுத்தம் செய்துவிட்டு ஒரு வீரரால் எப்படிப் போட்டியில் சிறப்பாகச் செயல்பட முடியும்?” எனக் கேள்வி எழுப்பிய அவர், ஹாக்கி கூட்டமைப்பின் தொடர் பொய்களால் வீரர்கள் மனரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.