பிறப்பிலிருந்தே கருப்பை இல்லாத ஒரு பெண், உயிரிழந்த ஒரு பெண் தானமாக வழங்கிய கருப்பையைப் பொருத்தி, தற்போது ஒரு ஆரோக்கியமான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ள அதிசயம் பிரிட்டனில் நடந்துள்ளது. கிரேஸ் பெல் என்ற அந்தப் பெண்ணுக்கு 16 வயதிலேயே கருப்பை வளர்ச்சி அடையாத குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.
தான் ஒருபோதும் தாயாக முடியாது என்று மருத்துவர்கள் கூறியதைக் கேட்டு உடைந்து போன கிரேஸ், மருத்துவ உலகின் முன்னேற்றத்தால் வெளிநாடுகளில் இத்தகைய அறுவை சிகிச்சைகள் நடப்பதை அறிந்து நம்பிக்கை கொண்டார். பிரிட்டனில் முதன்முறையாக உயிரிழந்த ஒருவரின் கருப்பையைப் பெற்று, வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் கர்ப்பமடைந்தது ஒரு மருத்துவ சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதம் ‘ஹியூகோ பாவெல்’ என்ற அழகான ஆண் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்தது. சுமார் 3 கிலோ எடையுடன் பிறந்த இந்தக் குழந்தையைக் கண்டபோது கிரேஸும் அவரது கணவர் ஸ்டீவும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.
தனக்கு இந்த வாழ்நாள் பரிசை வழங்கிய அந்த மறைந்த பெண்மணிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கிரேஸ் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். கருப்பை பாதிப்பால் தாய்மை அடைய முடியாது என்று ஏங்கும் பல பெண்களுக்கு இந்தச் சம்பவம் ஒரு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது.
