பெங்களூரு மற்றும் சண்டிகரில் இளைஞர்கள் சிலர் பல மணிநேரம் அசைவற்று சிலையைப் போல நின்றிருக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இது அமெரிக்கா போன்ற நாடுகளில் பரவி வரும் ‘ஜோம்பி டிரக்’ (Zombie Drug) எனப்படும் போதைப் பொருளின் தாக்கமாக இருக்கலாம் என மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

பெங்களூருவின் பாகலூர் பகுதியில் உள்ள நிட்டே கல்லூரி அருகே இளைஞர் ஒருவர் சாலையோரம் நீண்ட நேரமாக அசைவற்று நின்று கொண்டிருந்தார். சுற்றிலும் நடக்கும் எதற்கும் எதிர்வினையாற்றாமல், ஒருவித மயக்க நிலையில் அவர் நின்றிருந்த காட்சி அங்கிருந்தவர்களால் வீடியோ எடுக்கப்பட்டது.

இந்த வீடியோ ‘X’ தளத்தில் வெளியானதைத் தொடர்ந்து, “உயிரைப் பறிக்கும் ‘ஜோம்பி போதைப்பொருள்’ பெங்களூருவுக்குள் நுழைந்துவிட்டது. பெற்றோர்களே, இளைஞர்களே எச்சரிக்கையாக இருங்கள்” என்ற வாசகங்களுடன் காட்டுத்தீயாகப் பரவியது.

இதேபோன்ற ஒரு சம்பவம் சில நாட்களுக்கு முன்பு சண்டிகரின் செக்டர் 33B பகுதியில் நிகழ்ந்தது. அங்கு ஒரு டெலிவரி ஊழியர் சுமார் 2 முதல் 2.5 மணி நேரம் வரை ஒரே இடத்தில் சிலையாக நின்றிருந்தார். அவரது வாயில் பீடி இருந்தபோதிலும், கண்கள் ஒரு புள்ளியை நோக்கியவாறு அசைவற்று இருந்தது காண்போரை உறைய வைத்தது. பின்னர் காவல்துறையினர் அவரை மீட்டு மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர்.

சமூக வலைதளப் பதிவுகளில் இந்த நிலைக்கு ‘சைலாசின்’ கலந்த போதைப்பொருளே காரணம் எனக் கூறப்படுகிறது. இது பொதுவாக கால்நடைகளுக்கு மயக்க மருந்தாகப் பயன்படுத்தப்படுவது. இதை மனிதர்கள் பயன்படுத்தும்போது, தசைகள் செயலிழந்து, சுயநினைவற்ற நிலையில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் முடங்கிப் போக நேரிடும். இதன் விளைவாகவே பாதிக்கப்பட்டவர்கள் ‘ஜோம்பி’ (உயிர்வாழ் பிணம்) போல காட்சியளிக்கின்றனர்.

பெங்களூரு வீடியோ வைரலானதை அடுத்து, போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீடியோவைப் பதிவிட்டவரிடம் கூடுதல் விவரங்களைக் கேட்டுள்ள போலீசார், அந்த நபர் யார்? உண்மையில் அவர் போதைப்பொருள் உட்கொண்டிருந்தாரா? அல்லது ஏதேனும் உடல்நலக் கோளாறா? என்பது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். மேலும் இந்தச் சம்பவங்கள் குறித்து இதுவரை காவல்துறை தரப்பிலோ அல்லது மருத்துவத் துறையினரோ அதிகாரப்பூர்வமாக ‘போதைப்பொருள் பயன்பாடு’ என்று உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், வளர்ந்து வரும் இத்தகைய கலாச்சாரம் பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.