கர்நாடக மாநிலம் தும்குரு  மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயது பெண் சுசித்ரா, தனது 55 வயது தாய் புஷ்பவதியைக்  கொலை செய்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுசித்ராவின் தந்தை 18 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், தனது தந்தையின் மரணத்திற்குத் தனது தாய்தான் காரணம் என அவர் சந்தேகித்துள்ளார். இது குறித்து ஒரு ஜோசியரிடம் அவர் கேட்டபோது, “உன் தாய் செய்த  செய்வினை காரணமாகவே உன் தந்தை இறந்துபோனார்” என்று அந்த ஜோசியர் கூறியுள்ளார்.

இதனைத் தீவிரமாக நம்பிய சுசித்ரா, தனது தாயின் வீட்டிற்குச் சென்று அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது தலையணையால் முகத்தை அமுக்கிக் கொலை செய்துள்ளார்.

கொலைக்குப் பிறகு, அது இயற்கை மரணம் போலக் காட்ட முயன்ற சுசித்ரா, அவசர அவசரமாக இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார். ஆனால், புஷ்பவதியின் உடலில் இருந்த காயங்களைக் கண்டு சந்தேகமடைந்த கிராம மக்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த  போலீசார் உடலைக் கைப்பற்றி நடத்திய விசாரணையில், சுசித்ரா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். மூடநம்பிக்கையால் பெற்ற தாயையே மகள் கொன்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.