மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் விழா நாளை தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையில் அஞ்சலி செலுத்தும் தனது திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென ரத்து செய்துள்ளார். இந்த அதிரடி முடிவு அவர் திமுகவில் இணையக்கூடும் என்ற அரசியல் யூகங்களை வலுப்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா பிறந்தநாளை ஒட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை காலை 10:30 மணிக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் விழா நடைபெறுகிறது. அங்குள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் அவர், கட்சித் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்குகிறார். தொடர்ந்து கடற்கரை சாலையில் உள்ள உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கும் அதிமுக சார்பில் மரியாதை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட போதிலும், ஒவ்வொரு ஆண்டும் கடற்கரை சாலையில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதேபோல் இந்த ஆண்டும் பிப்ரவரி 24-ம் தேதி (நாளை) மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார் என்று கடந்த 19-ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
ஆனால், இன்று அந்த அறிவிப்பைத் திடீரெனத் திரும்பப் பெற்றுள்ள ஓபிஎஸ் தரப்பு, புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும், தனது சொந்தத் தொகுதியான போடியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஜெயலலிதாவின் படத்திற்கு மட்டும் அவர் மலர் தூவி மரியாதை செலுத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓ.பன்னீர்செல்வத்தின் இந்தத் திடீர் முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அவரது நெருங்கிய ஆதரவாளர்களான பி.எச். மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் ஏற்கனவே திமுகவில் இணைந்துவிட்டனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவோடு இணைய வாய்ப்புகள் மங்கியுள்ள நிலையில், ஓபிஎஸ் விரைவில் திமுகவில் ஐக்கியமாகக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாகவே, அதிமுகவின் அடையாளமாகத் திகழும் ஜெயலலிதா சிலைக்குச் சென்னையில் பொதுவெளியில் அஞ்சலி செலுத்துவதை அவர் தவிர்த்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் திமுக மற்றும் அதிமுக என இரு துருவங்களாகப் பிரிந்து கிடக்கும் தமிழக அரசியலில், ஓபிஎஸ்-ஸின் இந்த நகர்வு ஒரு முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
