டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாத கார் குண்டுவெடிப்புத் தாக்குதலில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பரிதாபாத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 360 கிலோ வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், இதுதொடர்பாக காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த முகமில் ஷகீல் கனியா என்ற நபரையும் போலீசார் கைது செய்தனர். நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவம் குறித்து உளவுத்துறை நடத்திய விசாரணையில், இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு நிதியுதவி செய்துள்ள அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

உளவுத்துறை விசாரணையின்படி, உமர், முசாமில், ஷாஹின் ஆகியோருக்கு ஹவாலா நெட்வொர்க் மூலம் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு ரூ.20 லட்சம் நிதியை அனுப்பியுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், குண்டு தயாரிப்பதற்காக உமர் என்பவர் ரூ.3 லட்சத்திற்கு அமோனியம் நைட்ரேட் உரம் வாங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, குண்டுவெடிப்பு நடந்த இடத்தில், இந்தியாவில் பாதுகாப்புப் படைகள் மட்டுமே பயன்படுத்தும் 9 எம்.எம். துப்பாக்கி தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 3 தோட்டாக்களைக் கைப்பற்றிய போலீசார், இதுதொடர்பாகவும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
