கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம், உரி பகுதியைச் சேர்ந்தவர் முகமது முன்வர் (வயது 24). இவரது வீட்டில் விலை உயர்ந்த மின்சாதனப் பொருட்கள் எதுவும் இல்லாத நிலையில், கடந்த 2 மாதங்களுக்கான மின்சாரக் கட்டணமாக ரூ.22 ஆயிரம் வந்துள்ளது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த முகமது முன்வர், தங்கள் பகுதிக்குட்பட்ட நெல்லிகுன்னு மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்று விசாரித்துள்ளார்.

அப்போது அதிகாரிகள், ஓரிரு நாட்களுக்குள் கட்டணத்தைச் செலுத்த வேண்டும், இல்லையெனில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர். இதனால், பலரிடம் கஷ்டப்பட்டு கடன் வாங்கி ரூ.22 ஆயிரத்தைத் திரட்டிய அவர், சம்பவத்தன்று மாலை 5 மணியளவில் மின்வாரிய அலுவலகத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கட்டணத்தைச் செலுத்த முயன்றார்.

ஆனால், அங்கு பணியிலிருந்த அதிகாரிகள், அலுவலக நேரம் முடிந்துவிட்டதால், மறுநாள் வந்து கட்டணத்தைச் செலுத்தும்படி கூறியுள்ளனர். அதேசமயம், அவரது தந்தை செல்போன் மூலம் தொடர்புகொண்டு, ஏற்கனவே வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்டு ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற முகமது முன்வர், மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று, சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்த 24 டிரான்ஸ்பார்மர்களின் (மின் மாற்றிகள்) பியூஸ் கேரியர்களை அடுத்தடுத்து உருவி எடுத்துச் சென்றுள்ளார். இதன் காரணமாக, அப்பகுதியில் உள்ள வீடு, கடைகள் எனப் பல பகுதிகளிலும் மின்சாரம் தடைபட்டு, மக்கள் இருளில் தவித்தனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். மின் மாற்றிகளின் பியூஸ்கேரியர்களை உருவிச் சென்றது முகமது முன்வர் தான் என்று விசாரணையில் தெரியவந்ததையடுத்து, அவரைக் கைது செய்தனர்.

மின் கட்டணம் செலுத்த அதிகாரிகள் மறுத்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில், பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையைப் பாதிக்கும் வகையில் செயல்பட்ட இந்தச் சம்பவம், காசர்கோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செயல் குறித்து மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.