கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில், ஒரு கணவர் தன் மனைவி மற்றும் சரக்கு வாகனத்தின் டிரைவர் மீது நடத்தையில் சந்தேகம் கொண்டு, 10 பேர் கொண்ட கும்பலுடன் சேர்ந்து இருவரையும் கடத்திச் சென்று மரக்கட்டையால் கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நவ்நகர் பகுதியைச் சேர்ந்த யங்கப்பா சூரி (45) என்பவரே இந்தக் கொடூரச் செயலைச் செய்துள்ளார்.
யங்கப்பா சூரிக்குச் சொந்தமான சரக்கு வாகனத்தில் பிரகாஷ் ஒசமணி (25) என்பவர் டிரைவராகப் பணியாற்றி வந்த நிலையில், அடிக்கடி சூரி வீட்டிற்கு வந்த பிரகாஷ், சூரியின் மனைவி போரவவ்வாவுடன் (40) சிரித்துப் பேசியுள்ளார்.
இதை வைத்தே இருவர் மீதும் சந்தேகம் கொண்ட சூரி, கடந்த அக்டோபர் 3ஆம் தேதி தன் கூட்டாளிகள் 9 பேருடன் சேர்ந்து, மனைவி மற்றும் டிரைவரைக் காரில் கடத்தி, ஊருக்கு வெளியே உள்ள காட்டுப் பகுதிக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு இருவரின் கைகால்களையும் கட்டி வைத்து மரக்கட்டையால் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர். இதில் ஒருவர் போரவவ்வாவையும், பரசப்பா மதரா என்பவர் பிரகாஷ் ஒசமணியையும் கொடூரமாகத் தாக்கும் காட்சிகள் வீடியோவில் பதிவாகி இருந்தது.
சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, அக்டோபர் 31ஆம் தேதி அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சூரி உட்பட 10 பேர் மீது நவ்நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
