மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போர் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை குறித்து, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நேற்று (ஏப். 5) அதிரடி ஆலோசனையில் ஈடுபட்டார். ஈரான் மற்றும் கத்தார் நாட்டு வெளியுறவு அமைச்சர்களுடன் தொலைபேசி வாயிலாகப் பேசிய அவர், பிராந்திய பாதுகாப்பு குறித்து விரிவாக விவாதித்தார். குறிப்பாக, உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க அமெரிக்கா விதித்துள்ள கெடு மற்றும் அதன் விளைவுகள் குறித்து இந்த ஆலோசனையில் முக்கியமாகப் பேசப்பட்டது.

​சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால், அது இந்தியாவைப் பாதிக்காமல் இருக்க ஜெய்சங்கர் இந்த ராஜதந்திர நகர்வை மேற்கொண்டுள்ளார். அமைதியை நிலைநாட்ட இந்தியா எப்போதும் துணை நிற்கும் என்று உறுதி அளித்த அவர், அதேசமயம் எரிசக்தி விநியோகம் தடையின்றி கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். வல்லரசு நாடுகளுக்கிடையிலான இந்த மோதலில், இந்தியாவின் நலனைப் பாதுகாக்கும் வகையில் ஜெய்சங்கர் எடுத்துள்ள இந்த ‘மிஷன்’ சர்வதேச அரங்கில் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.