சீனாவின் ஷான்சி மாகாணத்தைச் சேர்ந்த 34 வயது பெண்ணுக்கு, 2020-ஆம் ஆண்டு மோசடி வழக்கில் 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவர் கர்ப்பிணியாக இருந்ததால், சிறையில் அடைக்காமல் வீட்டிலேயே தண்டனை அனுபவிக்க அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் இதையே ஒரு விலக்காக பயன்படுத்தி, ஒவ்வொரு முறை மகப்பேறு காலம் முடிந்ததும், மீண்டும் மீண்டும் கர்ப்பம் தரித்து சிறையில் செல்லாமல் தப்பித்துவந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் இவர் மூன்று முறை கர்ப்பமாகி, தண்டனையை தவிர்த்துள்ளார்.
தான் பெற்ற மூன்று குழந்தைகளில், இரண்டு குழந்தைகளை தனது விவாகரத்தான கணவரிடம் கொடுத்தும், மற்றொரு குழந்தையை தனது சகோதரரிடம் ஒப்படைத்தும் வந்துள்ளார். இதுபோல் திட்டமிட்டு கர்ப்பம் தரித்து வருவதை போலீசார் கண்டறிந்ததும், அவரை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சீனாவின் குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி, ஒரு பெண் குற்றவாளி கர்ப்பமாக இருந்தாலோ அல்லது குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டிருந்தாலோ, அவருக்கு வீட்டுக் காவல் வழங்கப்படலாம் என்று தெரிவிக்கிறது. ஆனால் இந்த பெண் அந்தச் சட்டத்தை தவறாக பயன்படுத்தி, சிறைத்தண்டனையை வருடங்கள் தள்ளிப்போட்ட சம்பவம் சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
