தமிழகச் சட்டமன்றத்தில் இன்று தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய்யை நோக்கி அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்து அவையை அதிரவைத்தார்.
“தவெக ஆட்சியமைக்கப் பெரும்பான்மை மக்கள் ஆதரவு அளிக்கவில்லை; உங்கள் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால் தான் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டீர்கள்” என்று சாடிய உதயநிதி, வெற்றி பெற்ற பிறகு இதுவரை அந்தத் தொகுதி மக்களைச் சந்தித்து நன்றிகூட தெரிவிக்கவில்லை எனச் சுட்டிக்காட்டினார்.
மேலும், தற்போது தவெக அரசுக்கு ஆதரவு அளித்துள்ள சிபிஐ, சிபிஎம் மற்றும் விசிக ஆகிய கட்சிகள் திமுக கூட்டணியில் இருப்பவை என்றும், தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்ற ஒற்றைக் காரணத்திற்காக மட்டுமே அவர்கள் உங்களுக்கு ஆதரவு அளித்துள்ளார்களே தவிர, உங்கள் கொள்கைக்காக அல்ல என்றும் ஆவேசமாகத் தெரிவித்தார். உதயநிதியின் இந்தப் பேச்சு சட்டமன்றத்தில் தவெக மற்றும் திமுக உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
