குஜராத் அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணி 1 ரன்னில் தோல்வியடைந்த விதம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. போட்டியின் கடைசி ஓவரில் வெற்றிக்கு 2 பந்துகளில் 2 ரன்கள் தேவைப்பட்டபோது, 5-வது பந்தில் ரன் எடுக்க வாய்ப்பு இருந்தும் டேவிட் மில்லர் ஓட மறுத்துவிட்டார்.
இதனால் கடைசி பந்தில் குல்தீப் யாதவ் ஆட்டமிழக்க, டெல்லி அணி வெற்றியைத் தவறவிட்டது. மில்லரின் இந்த முடிவு தவறானது என்றும், அவர் ஒரு ரன் எடுத்திருந்தால் ஆட்டம் குறைந்தபட்சம் ‘சூப்பர் ஓவர்’ வரை சென்றிருக்கும் என்றும் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்துப் பேசியுள்ள இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், டெல்லி அணி தனது வெற்றியை குஜராத் அணிக்குத் தாரை வார்த்துவிட்டதாகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார். மில்லர் ஏன் ரன் ஓடவில்லை என்பது புரியவில்லை என்றும், அந்த இடத்தில் தான் இருந்திருந்தால் மில்லரை எப்படியாவது ஓட வைத்திருக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தத் தோல்வியால் டெல்லி அணியின் நம்பிக்கை சிதைவதுடன், புள்ளிப் பட்டியலில் பின்தங்கியிருந்த குஜராத் அணி மீண்டும் போட்டிக்குள் வர டெல்லி அணியே வழிவகுத்துவிட்டதாகவும் அஸ்வின் சுட்டிக்காட்டியுள்ளார்.
