இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 19-வது ஐ.பி.எல். தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இந்தச் சூழலில் சென்னை அணியின் செயல்பாடு குறித்துப் பேசியுள்ள முன்னாள் வீரர் எல்.பாலாஜி, கடந்த 10 முதல் 12 ஆண்டுகளில் பல உள்ளூர் திறமைகளை சென்னை அணி அடையாளம் காணத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆரம்பக் காலங்களில் வி.பி. சந்திரசேகர் முன்னெடுத்த முயற்சியால் பத்ரிநாத், முரளி விஜய், அஸ்வின் போன்ற தமிழக வீரர்கள் அணியில் முக்கிய இடம் பிடித்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.தற்போதுள்ள நிலையில், சென்னை அணி மீண்டும் உள்ளூர் வீரர்களைத் தேடிப்பிடித்து வாய்ப்பளிக்க வேண்டியது அவசியம் என்று பாலாஜி வலியுறுத்தியுள்ளார்.

இது தமிழ்நாடு வீரர்களுக்கு மட்டுமல்லாமல், விதர்பா அல்லது பஞ்சாப் என எந்த மாநிலத்தைச் சேர்ந்த திறமையான வீரர்களாக இருந்தாலும் அவர்களைக் கண்டறிந்து அணியில் சேர்க்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

பழைய பாணியிலேயே தொடர்ந்து பயணிக்காமல், புதிய உள்ளூர் திறமைகளைச் சரியாகப் பயன்படுத்தினால் மட்டுமே சென்னை அணியால் வலுவான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.