ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதல் தற்போது வரை ஓயவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பல பிரிவுகளாக அதிமுக தலைவர்கள் பிரிந்துள்ளனர். இதனால் வாக்குகள் பிரிந்து தேர்தலில் தோல்விக்கு மேல் தோல்வியை அதிமுக பெற்று வருகின்றது. இப்படியான நிலையில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில் மீண்டும் அதிமுகவில் உள்ள மூத்த நிர்வாகி ஒருவர் போர்க்கொடி தூக்கி இருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. அதாவது சமீபத்தில் அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு நடந்த பாராட்டு விழாவில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா புகைப்படங்கள் இல்லை என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறி எடப்பாடி பழனிச்சாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவை புறக்கணித்தார்.

இதனைத் தொடர்ந்து செங்கோட்டையனுக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே முரண்கள் இருப்பதாக சமீப காலமாக கூறப்பட்டு வரும் நிலையில் நேற்று நடைபெற்ற ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவில் செங்கோட்டையன் பங்கேற்காதது பேசு பொருளாக மாறியது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.

அதில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்ட நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. ஆனால் ஈரோட்டில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் பிறந்தநாள் விழாவில் பங்கேற்காதது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது, நினைவு நாள் என்றால் சென்னைக்கு சென்று இருப்பேன், பிறந்தநாள் என்பதால் தொண்டர்களுடன் ஆங்காங்கே இருந்தபடி விழாவில் கலந்து கொள்ளலாம் என்று தான் இங்கேயே இருந்து விட்டேன் என செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.