பெரம்பூர் தேர்தல் பரப்புரையில் பேசிய நடிகர் சத்யராஜ், நடிகர் விஜய்யின் பழைய ‘தலைவா’ படப் பிரச்சனையை நினைவுபடுத்தி மிகக் கடுமையான எள்ளலுடன் பேசினார். அன்று படப் பிரச்சனைக்காகக் கொடநாட்டிற்குச் சென்று “அம்மா.. என்னை மன்னிச்சிருங்க” என்று கெஞ்சிய விஜய், தெரியாமல் அங்கே போய்த் தலைவியை ‘ஜெயலலிதா ஆன்ட்டி’ என்று கூப்பிட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும் எனச் சத்யராஜ் கிண்டலாகக் கேள்வி எழுப்பினார். அப்படி மட்டும் சொல்லியிருந்தால், ரோட்டோரக் கடையில் கொத்து பரோட்டா போடுவது போல ‘டக்டக்டக்’ என விஜய்யை ஒரு வழி பண்ணியிருப்பார்கள் என்று அவர் தனது பாணியில் விளாசினார்.
தொடர்ந்து விஜய்யின் தற்போதைய அரசியல் அணுகுமுறையை விமர்சித்த அவர், அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் ‘நான் ரெடி தான்’ என்று விஜய் பாடியிருக்கவே முடியாது; ‘தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டப் பரோட்டா’ என்றுதான் பாடியிருக்க முடியும் என நக்கலாகக் குறிப்பிட்டார். விஜய்யின் அரசியல் பேச்சுகளைப் பரோட்டா கடையுடன் ஒப்பிட்டுச் சத்யராஜ் பேசிய இந்த “கொத்து பரோட்டா” பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி, பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
