இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதி சுற்றில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன. இந்தப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய பெண் கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ்-ஐப் பாராட்டும் விதமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) ஆதரவாளர் ஒருவர் சமூக வலைதளத்தில் இட்ட பதிவு பெரும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. அந்தப் பதிவில்,
“கிறிஸ்தவர்கள் வெற்றி பெறும் காலம் வந்துவிட்டது” என்று குறிப்பிட்டுள்ள அவர், 2026-ஆம் ஆண்டும் அதே நடக்கும் என்றும், நடிகர் விஜய்யும் கிறிஸ்தவர் என்பதால், 2026-ஆம் ஆண்டில் ‘கிறிஸ்தவர்கள் வெற்றி பெறும் காலம்’ என்பது உறுதி என்றும் பதிவிட்டிருந்தார். ஒரு விளையாட்டு வீரரின் தனிப்பட்ட சாதனையை அவரது மதத்துடன் தொடர்புபடுத்தி, அதை ஓர் அரசியல் கட்சியின் வெற்றி முழக்கத்துடன் முடிச்சுப் போட்டது பலரின் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன்கள், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கையே மதம் மற்றும் ஜாதி சார்ந்த வேறுபாடுகளைக் களைய வேண்டும் என்று வலியுறுத்துவதாக இருக்கும் நிலையில், அதன் ஆதரவாளரே மதரீதியான பதிவுகளைப் பகிர்தல் அக்கட்சியின் அடிப்படை நோக்கத்திற்கே முரணானது என்று சுட்டிக்காட்டியுள்ளனர். இதுபோன்ற பதிவுகள் சமூகத்தில் தேவையற்ற சர்ச்சைகளையும், பிளவுகளையும் உருவாக்கக்கூடும் என்பதால், கட்சி ஆதரவாளர்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யும்போது மிகவும் கவனத்துடனும், பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். தலைவரான விஜய், மதச்சார்பற்ற கொள்கைகளைக் கடைப்பிடிப்பதாகக் கூறிவரும் சூழலில், ஆதரவாளரின் இத்தகைய மதச்சாயம் பூசும் செயல், கட்சிக்கும் அதன் லட்சியங்களுக்கும் களங்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற விவாதமும் இணையத்தில் எழுந்துள்ளது.
கிறிஸ்தவர்கள் வெற்றி பெறும் காலம்
2026 ம் அதே நடக்கும் pic.twitter.com/ZFVVSxIcwS
— Bigil Michel _TVK_ (@MichelRaja13) October 31, 2025
