அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகத்தை (த.வெ.க) கூட்டணி அமைக்க வைப்பதற்காகவே சவுக்கு சங்கர் பல மாதங்களாக இயங்கினார் என்றும், அதன் ஒரு பகுதியாகவே கரூர் சம்பவத்தின்போது அவர் விஜய் அவர்களுக்கு முழு ஆதரவு அளித்தார் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. கரூர் பொதுக்கூட்டத்தில் விஜய் ஏன் தாமதமாக வந்தார், அவர் ஏன் பேசிக்கொண்டிருக்கும்போதே பாதியில் பேச்சை நிறுத்திவிட்டுச் சென்றார், கூட்ட நெரிசலுக்குக் காரணம் என்ன போன்ற கேள்விகளை எதிர்க்கட்சியினர் சரமாரியாக எழுப்பியபோது, த.வெ.க. தரப்பு பதில் கூறினதோ இல்லையோ, அந்த அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளித்து, த.வெ.க-விற்கு வலுவான ஆதரவுக் குரலாக சவுக்கு சங்கர் அப்போது நின்றார். இதன் மூலம் அதிமுக-த.வெ.க. கூட்டணிக்கு களம் அமைக்கும் முயற்சியில் அவர் இருந்ததாகவே பார்க்கப்பட்டது.

ஆனால், சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் த.வெ.க-வுடன் எந்தவிதக் கூட்டணிப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று திட்டவட்டமாக அறிவித்த பிறகு, த.வெ.க.வும் இனி அதிமுகவுடன் கூட்டணிக்குச் செல்லப் போவதில்லை என்பதை உணர்ந்த சவுக்கு சங்கர் தனது நிலைப்பாட்டை உடனடியாக மாற்றிக்கொண்டார். முன்பு எந்த எதிர்க்கட்சிகள் கரூர் சம்பவம் தொடர்பாக கேள்விகளை எழுப்பினார்களோ, அதே கேள்விகளைத் தற்போது சவுக்கு சங்கர் விஜய்யை நோக்கி எழுப்பி வருகிறார்.

“ஏன் தாமதமாகச் சென்றீர்கள்? ஏன் பேச்சைப் பாதியில் நிறுத்திவிட்டுச் சென்றீர்கள்? ஏன் ஆம்புலன்ஸை அனுப்பினீர்கள் ? ஏன் தண்ணீர் பாட்டிலை தூக்கி எறிந்தீர்கள்?” என்று முன்பு விஜய் எதிர்ப்பாளர்கள் கேட்ட அதே விமர்சனங்களை அவர் இப்போது அடுக்கடுக்காக முன்வைப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திடீர் நிலை மாற்றம், கூட்டணி முயற்சி தோல்வியடைந்ததின் வெளிப்பாடாகவே அரசியல் பார்வையாளர்களால் பார்க்கப்படுகிறது.