கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களை நடிகர் விஜய் நேரில் சென்று சந்திக்காமல், அவர்களை தாமிருக்கும் இடத்திற்கே வரவழைத்ததாக எழுந்த விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இந்தச் சூழலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) முக்கிய நிர்வாகியான கோயம்புத்தூரைச் சேர்ந்த வைஷ்ணவி என்பவர், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு வீடியோவைத் தயாரித்து வெளியிட்டார். அந்தக் காணொளியில், கரூரில் இறந்தவர்களின் உடல்கள், சடலங்களை எடுத்துச் செல்லும் ஸ்ட்ரெச்சரில் தானாகவே விஜய்யின் இருப்பிடத்திற்கு நகர்வதைப் போலவும், விஜய் போலியாகக் கண்ணீர் விட்டு அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதைப் போலவும் சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்தப் பதிவு விஜய் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், பல தரப்பிலிருந்தும் கடுமையான விமர்சனங்கள் வைஷ்ணவி மீது குவிந்தன.
இந்த AI வீடியோ சர்ச்சை ஒருபுறமிருக்க, இன்ஸ்டாகிராமில் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தொடர்ந்து பதிவிட்டு வரும் கார்த்திக் என்பவர், வைஷ்ணவிக்கு எதிராகப் பகிரங்கமாகக் கொலை மிரட்டலை விடுத்துள்ளார். அவர் தனது சமூக வலைதளப் பதிவில், “சில பெண்களைப் பார்த்தால் கையெடுத்துக் கும்பிட வேண்டும், சில பெண்களைப் பார்த்தால் நன்றாகப் பழகத் தோன்றும், சில பெண்களைப் பார்த்தால் காதலிக்கவும் திருமணம் செய்யவும் தோன்றும், ஆனால் ஒரு சில பெண்களைப் பார்த்தால் மட்டும் தான் கண்டம் துண்டமாக வெ**க் கொ* செய்யத் தோன்றும்” என்று வெளிப்படையாகப் பதிவு செய்துள்ளார். வைஷ்ணவி தவறு செய்திருந்தாலும், சமூக வலைதளத்தில் ஒரு பெண்ணுக்கு எதிராக இத்தகைய பகிரங்கக் கொலை மிரட்டலை விடுப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்கது என்றும், இது ஏற்க முடியாத வன்முறை என்றும் நெட்டிசன்கள் பலரும் கார்த்திக்கைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
View this post on Instagram
