தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்து ரோபோ சங்கர் நேற்று மஞ்சள் காமாலை நோயினால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னையில் நேற்று ஒரு படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று வந்த நடிகர் ரோபோ சங்கர், திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை சென்னை பெருங்குடி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு நீர்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டதாக ஆரம்ப மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது.
முன்னதாகவே மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தொடர்ந்து கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை அவரது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து, அவரை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றினர். இந்நிலையில், தீவிர சிகிச்சை தொடர்ந்தும் பலனளிக்காமல், இரவு 8.30 மணியளவில் ரோபோ சங்கர் மரணம் அடைந்ததாக மருத்துவமனை தரப்பில் அறிவிக்கப்பட்டது.
ரோபோ சங்கரின் மரணத்திற்குப் பிறகு, திரையுலகினர், ரசிகர்கள், ரசிகையர்கள் உள்ளிட்டோர் சமூக ஊடகங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, நடிகர் கமல்ஹாசன், தனக்கே உரிய வகையில் உருக்கமான இரங்கலை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “ரோபோ சங்கர்.. ‘ரோபோ’ புனைப்பெயர் தான். என் அகராதியில் நீ மனிதன் ஆதலால் என் தம்பி… போதலால் மட்டும் எனை விட்டு நீங்கி விடுவாயா நீ?… உன் வேலை நீ போனாய், என் வேலை தங்கிவிட்டேன். நாளையை எமக்கென நீ விட்டுச் சென்றதால் நாளை நமதே.” என்று பதிவிட்டுள்ளார்.
#RESHARE | கமலுடன் ரோபோ சங்கரின் நினைவுகள்….#SunNews | #RoboShankar | #KamalHaasan pic.twitter.com/BgpGQG1dum
— Sun News (@sunnewstamil) September 18, 2025
இந்நிலையில் நடிகர் ரோபோ சங்கருக்கு நடிகர் கமல்ஹாசன் அறிவுரை வழங்கிய பழைய காணொளி ஒன்று தற்போது வைரல் ஆகி வருகின்றது. அந்த வீடியோவில் மஞ்சள் காமாலை நோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்து அவரிடம் இனிமேல் சாப்பாடு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். எந்த தவறான பழக்கமும் வேண்டாம். கொஞ்சம் தவறினால் கூட எங்கோ போய்டுவோம் என்று நடிகர் கமல்ஹாசன் கூறுகிறார். மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
