தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ‘கருப்பு’ திரைப்படத்திற்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் காட்சிகள் வட மாநிலங்களில் சில திரையரங்குகளில் அனுமதியின்றி திரையிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்து பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது ‘கருப்பு’ படமும் அதேபோல் இணையத்தில் கசிய வாய்ப்புள்ளதாகத் திரையுலகினர் அஞ்சுகின்றனர்.
இந்தத் தவறு நடந்ததை கியூப் (Qube) நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு அல்லது கவனக்குறைவால் இந்த அத்துமீறல் நடந்துள்ளதாகத் தெரிவித்த அந்த நிறுவனம், இதற்காகப் படக்குழுவிற்கு உரிய நஷ்ட ஈடு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது. இருப்பினும், ஒரு படைப்பிற்கு இழைக்கப்பட்ட இந்த அநீதி குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கூட்டாக ஆலோசித்து வருகின்றனர். இது தொடர்பாக விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
