தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும், ஆட்சியில் பங்கு அளிக்கப்பட வேண்டும் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் இன்று ஒரு தரப்பினர் தனியாக நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளது காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டணி விவகாரங்கள் குறித்து கட்சி மேலிடம் மட்டுமே முடிவெடுக்க வேண்டும் என்றும், பொதுவெளியில் இது குறித்துப் பேசக் கூடாது என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். ஆனால், மற்றொரு தரப்பினர் ‘ஜனநாயகன் பொங்கல்’ என்ற பெயரில் இன்று மாலை கோயம்பேட்டில் ஒரு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளனர். இதில் ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என்ற முழக்கங்களை முன்வைத்து அதிருப்தி நிர்வாகிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படும் இந்தத் தரப்பினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று கட்சியின் மூத்த தலைவர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: “கோயம்பேட்டில் இன்று நடைபெறும் நிகழ்ச்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. கட்சியின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் அல்லது கூட்டணி விவகாரங்கள் குறித்து அங்கு யாராவது பேசினால், அவர்கள் மீது நிச்சயமாகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.”
“தொண்டர்களின் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் அதை கட்சி மேடைகளில் பேச வேண்டும். பொதுவெளியில் பேசுவது கூட்டணிக்குத் தேவையற்ற நெருக்கடியை உருவாக்கும். தமிழகத்தில் இந்தியா கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது. தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பேச கிரிஸ் சோடங்கர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை டெல்லி மேலிடம் ஏற்கனவே நியமித்துள்ளது. அவர்கள் தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்,” என்று அவர் விளக்கமளித்தார்.
கடலூர் மாநாட்டில் தேமுதிக நிர்வாகி விஜய பிரபாகரன், விஜய்க்கு ஆலோசனை கூறுவதாக நினைத்து காங்கிரஸைப் பற்றி விமர்சித்திருந்தார். இதற்குப் பதிலளித்த செல்வப்பெருந்தகை, “காங்கிரஸ் ஒருபோதும் கொல்லைப்புற வழியாகச் செயல்படும் கட்சி அல்ல. இதனைப் புரிந்துகொள்ள வேண்டியவர்கள் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்,” என்று சாடினார்.
