எச். வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அடுத்தடுத்த சிக்கல்களில் சிக்கித் தவித்து வருகிறது. முதலில் பொங்கலுக்கு வெளியாக வேண்டிய இப்படம், தணிக்கை குழுவின் (Censor Board) கடுமையான விதிகளால் சான்றிதழ் கிடைக்காமல் வெளியீடு தள்ளிப்போனது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்த நிலையில், தற்போது இப்படத்தின் ஓடிடி உரிமம் தொடர்பாக வெளியாகியுள்ள தகவல் பேரிடியாக அமைந்துள்ளது.

​பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் பிரைம் இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை ரூ.120 கோடிக்கு வாங்கியிருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த ஒப்பந்தத்தை அந்த நிறுவனம் அதிரடியாக ரத்து செய்துவிட்டதாகத் தகவல்கள் கசிகின்றன. படத்தின் வெளியீட்டில் ஏற்பட்டுள்ள காலதாமதம் மற்றும் தணிக்கை குழுவின் சிக்கல்களே இந்த முடிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. விஜய்யின் அரசியல் வருகைக்கு முன்னதாக வெளியாகும் மிக முக்கியமான படம் என்பதால், இதற்குப் பின்னால் ஏதேனும் அரசியல் அழுத்தம் இருக்குமோ என சமூக வலைதளங்களில் விவாதங்கள் அனல் பறக்கின்றன.