மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் நடந்த இந்தச் சம்பவம், உறவுகளுக்கு இடையே இருக்கும் விரிசலையும் சிறுவர்களின் வக்கிரம் நிறைந்த மனநிலையையும் காட்டி ஒட்டுமொத்த நாட்டையுமே உறைய வைத்திருக்கிறது. வெறும் 15 வயதே ஆன சிறுவன், படிப்பைப் பாதியில் நிறுத்தியதற்காகவும், எப்போதும் டிவி பார்த்துக் கொண்டிருந்ததற்காகவும் கண்டித்த தனது 60 வயது அத்தையை, மூங்கில் தடியால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளான். ஆத்திரத்தில் அத்தையின் மண்டையை உடைத்த அந்தச் சிறுவன், தனது நண்பனின் உதவியுடன் உடலை சோபாவுக்கு அடியில் மறைக்க முயன்றுள்ளான். ஆனால், உடலைத் தூக்க முடியாததால் அப்படியே போட்டுவிட்டுத் தப்பியோடிய அந்தச் சிறுவர்களின் செயல் இப்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

​கொலை செய்யப்பட்ட துர்கா பன்சோட்டின் மகள், தனது தாயை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றும் பலனளிக்காததால் சந்தேகமடைந்து போலீசில் புகார் அளித்துள்ளார். விசாரணையில், அந்தச் சிறுவன் ஏற்கனவே தனது அத்தையிடம் திருடியதும், கொலை செய்த பிறகு யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக அத்தையின் செல்போனை உடைத்ததும் அம்பலமாகியுள்ளது. வெறும் ஒரு சின்ன கண்டிப்புக்காகத் தங்களை வளர்த்தவர்களையே கொல்லும் அளவுக்குச் சிறுவர்கள் துணிந்திருப்பது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கைதான அந்த இரண்டு சிறுவர்களும் தற்போது சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.