நடந்து முடிந்த 17-வது தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் அதிர வைத்துள்ளது. கடந்த 59 ஆண்டுகாலமாக தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வந்த திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. இதில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) மிகப்பாரிய அளவில் 34.02% வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. மறுபுறம், ஆளுங்கட்சியான தி.மு.க 59 இடங்களுடன் 24.19% வாக்குகளையும், அ.தி.மு.க 47 இடங்களுடன் 21.21% வாக்குகளையும் மட்டுமே பெற்று பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன.

​இந்தத் தேர்தல் முடிவுகளில் வெளிவந்துள்ள ஒரு அதிர்ச்சித் தகவல் திராவிடக் கட்சிகளின் தலைமைகளை நிலைகுலையச் செய்துள்ளது. தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளின் அதிகாரப்பூர்வ உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட, அவர்களுக்குக் கிடைத்துள்ள வாக்குகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. இதன் மூலம், இரு கட்சிகளையும் சேர்ந்த சுமார் 1.65 கோடி சொந்தத் தொண்டர்களே தங்களது சொந்தக் கட்சிக்கு வாக்களிக்காமல் கைவிட்டுள்ளனர் என்ற கசப்பான உண்மை தெரியவந்துள்ளது. இந்த அதிரடி ட்விஸ்ட் திராவிடக் கட்சித் தலைமைகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.