விமானப் பயணத்தின் போது எகானமி வகுப்பின் நெரிசலான இருக்கைகளைத் தவிர்த்து, கால்களை நீட்டி நிம்மதியாக பிசினஸ் வகுப்பில் பயணிக்க சமூக ஊடகங்களில் பிரபலமாக இருக்கும் ‘இன்ஃப்ளூயன்சர்கள்’ இதற்குப் புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளனர். அதாவது, போலியாகக் காயம் ஏற்பட்டது போல் நடித்து ஏமாற்றுவது. தற்போது, சர்தக் சச்தேவா என்ற இன்ஸ்டாகிராம் உள்ளடக்கப் படைப்பாளர் (Content Creator) ஒருவர், இந்திய விமான நிலையம் ஒன்றில் இத்தகைய சர்ச்சைக்குரிய செயலில் ஈடுபட்டு, அது தொடர்பான வீடியோவை வெளியிட்டு நெட்டிசன்களின் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளார்.

வைரலாகி வரும் அந்த வீடியோவில், சர்தக் சச்தேவா கழுத்தில் போலி ‘நெக் பிரேஸ்’  மற்றும் கையில் கட்டு  போட்டுக் கொண்டு ஏர் இந்தியா நிறுவனத்தின் கவுண்டருக்குச் செல்கிறார். தனக்குக் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, தனக்கு ‘ஃபர்ஸ்ட் கிளாஸ்’ இருக்கை தருமாறு ஊழியர்களிடம் கேட்கிறார்.

 

அங்கு பணியில் இருந்த பெண் ஊழியர், ஃபர்ஸ்ட் கிளாஸ் இருக்கைகள் காலியாக இல்லை என்று கூறிய போதிலும், அவரது போலி காயத்தைப் பார்த்துப் பரிதாபப்பட்டு, மனிதாபிமான அடிப்படையில் அவரை ‘பிசினஸ் கிளாஸ்’ இருக்கைக்கு மாற்றிக் கொடுத்துள்ளார். இந்த வீடியோ மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தும் என்பதை முன்கூட்டியே கணித்த சர்தக், தனது பதிவில் ஒரு விளக்கத்தையும் அளித்துள்ளார்.

அதில், இதனை யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். உலகளவில் புகழ்பெற்ற யூடியூபரான ‘ஏர்ராக்’ செய்ததைப் பார்த்து, அதன் இந்தியப் பதிப்பாக நான் இதை முயற்சி செய்தேன். ஏர் இந்தியா ஊழியர்களின் கனிவான உபசரிப்பிற்கு நன்றி! இது யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காகச் செய்யப்பட்டது அல்ல; வெறும் பொழுதுபோக்கிற்கான ஒரு சமூகப் பரிசோதனை மட்டுமே  என்று குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், இந்த விளக்கம் நெட்டிசன்களை அமைதிப்படுத்தவில்லை. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் கடுமையான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக, இத்தகைய ஏமாற்று வேலைகளால் உண்மையிலேயே உடல்நலம் பாதிக்கப்பட்டு வரும் பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என்று பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.