வறுமை மற்றும் போதிய வசதிகள் இல்லாத நிலையிலும், தன் இளம் மகளை ஒரு தந்தை சைக்கிளில் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி, லட்சக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்டுள்ளது. அந்த வீடியோவில், தந்தை ஒருவர் தனது சைக்கிளின் பின் இருக்கையில் ஒரு சிறிய நாற்காலியைப் பாதுகாப்பாகப் பொருத்தி, அதில் தனது மகளை அமர வைத்துள்ளார். ஒரு கையில் சைக்கிளை ஓட்டிக்கொண்டும், மற்றொரு கையால் பின்னால் இருக்கும் மகளை அன்போடு அணைத்துப் பிடித்துக்கொண்டும் அவர் சாலையில் கவனமாகச் செல்லும் காட்சிகள் பார்ப்போரை உருக வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
The World Sees a Bicycle, But a Daughter Sees Her Father’s Kingdom of Love and Safety ❤️ pic.twitter.com/gvuX8HHBwq
— Divya Tripathi (@Divya_Tripa23) May 24, 2026
“உலகம் பார்ப்பதற்கு இது ஒரு சாதாரண சைக்கிள், ஆனால் ஒரு மகளுக்கு இது அவளது தந்தையின் அன்பும் பாதுகாப்பும் நிறைந்த பேரரசு” என்ற வாசகத்துடன் எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவியது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், ஆடம்பர கார்கள் மற்றும் விலையுயர்ந்த பரிசுகளை விட, இந்த எளிய தந்தையின் புன்னகையும் பாசமுமே விலைமதிப்பற்றது என்று பாராட்டி வருகின்றனர். “உலகம் செல்வத்தை டாலர்களில் அளவிடலாம், ஆனால் மகள்கள் அதை தந்தையின் அன்பிலும் பாதுகாப்பிலும்தான் அளவிடுகிறார்கள்” என்றும், அந்தச் சிறுமிக்கு அந்த சைக்கிள்தான் “ரோல்ஸ் ராய்ஸ்” கார் என்றும் நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளனர்.
