வாக்குப்பதிவு நடைபெற்ற நாளன்று சென்னை துறைமுகம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேட்பாளர் சினோரா அசோக் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, திமுக மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான பி.கே. சேகர்பாபுவிடம் சென்னை பெருநகர காவல் துறையினர் சுமார் 4 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தியுள்ளது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாக்குப்பதிவு நாளில் வாக்குச்சாவடி ஒன்றின் அருகே தவெக மற்றும் திமுக தொண்டர்களுக்கு இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இந்த மோதலின் போது அதிகார பலத்தைப் பயன்படுத்தி தவெக வேட்பாளர் சினோரா அசோக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தவெக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக சினோரா அசோக் தரப்பிலும், திமுக தரப்பிலும் காவல் நிலையத்தில் மாறி மாறி புகார்கள் அளிக்கப்பட்டன. இதில் சினோரா அசோக் அளித்த புகாரின் பேரில் உடனடியாக களத்தில் இறங்கிய காவல்துறையினர், சேகர்பாபுவை நேரில் ஆஜராக உத்தரவிட்டு சுமார் 4 மணி நேரம் தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர். விசாரணை முடிந்த பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இதனிடையே, சினோரா அசோக் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் சேகர்பாபுவை கைது செய்யும் முனைப்பில் தவெக தீவிரமாக இறங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் காரணமாக சென்னை துறைமுகம் தொகுதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவதால், அசம்பாவிதங்களைத் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
