கோவைப்புதூரை சேர்ந்த 39 வயது பெண் ஒருவர் கார் வைத்திருந்தார். அந்த காரை வாடகை நிறுவனத்துடன் இணைத்ததால், அதே பகுதியில் வசிக்கும் சமீர் (27) என்பவர் டிரைவராக வேலைக்கு சேர்ந்தார். சமீர் வேலைக்கு சேர்ந்த மூன்றாவது நாளில், தனது செல்போன் பழுதடைந்துவிட்டதாக கூறி, வாடகை வேலைக்குப் போக செல்போன் அவசியம் என்பதால் உங்களிடம் இருந்தால் கொடுக்குமாறு பெண்ணிடம் கேட்டார். இதையடுத்து, பெண் தனது செல்போனில் இருந்த புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அழித்து, சமீருக்கு அந்த போனை வழங்கினார்.
இரண்டு நாட்கள் கழித்து, சமீர் திடீரென அந்த பெண்ணின் செல்போனுக்கு அழைத்து, “நீங்கள் கொடுத்த செல்போனில் இருந்த உங்கள் நிர்வாண புகைப்படங்கள், அந்தரங்க வீடியோக்களை நான் பார்த்துவிட்டேன். நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள், எனக்கு பிடிச்சுப்போச்சு ” என்று கூறியஉள்ளார். இதைக் கேட்ட பெண் அதிர்ச்சியடைந்து, “அந்த புகைப்படங்கள், வீடியோக்களை நீங்கள் ஏன் பார்த்தீர்கள்? உடனே செல்போனை திருப்பிக் கொண்டு வாருங்கள்” என்று கேட்டார். ஆனால், சமீர் அதை உடனடியாக ஒப்படைக்கவில்லை.
பின்னர், அந்த பெண்ணின் கணவர் இல்லாத நேரத்தில், சமீர் வீட்டுக்குள் நுழைந்து, அந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை காட்டி, “எனது ஆசைக்கு இணங்க வேண்டும்” என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பதற்றமடைந்த பெண் சத்தமாக அலறினார். அந்த சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, சமீரை பிடித்து போலீசுக்கு ஒப்படைத்தனர்.
குனியமுத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, சமீரை கைது செய்து, அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கோவைப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
