சீனாவில் பனிச்சிறுத்தை அருகே சென்று புகைப்படம் எடுக்க முயன்ற சுற்றுலாப் பயணியை, அந்தச் சிறுத்தை மின்னல் வேகத்தில் தாக்கி முகத்தைக் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரு குழுவாகச் சுற்றுலாப் பயணிகள் அப்பகுதியில் பனிச்சறுக்கு விளையாடிவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது சாலையோரம் அரிய வகை விலங்கான பனிச்சிறுத்தை ஒன்று அமர்ந்திருப்பதைக் கண்டனர்.
அவர்களில் ஒருவர் ஆர்வமிகுதியால், காரை விட்டு இறங்கி அந்தப் பனிச்சிறுத்தையின் மிக அருகே சென்று தனது கைபேசியில் புகைப்படம் எடுக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பனிச்சிறுத்தை, கண் இமைக்கும் நேரத்தில் அந்த நபரைப் பாய்ந்து தாக்கியது. இதில் அவரது முகம் மற்றும் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
அங்கிருந்த சக சுற்றுலாப் பயணிகள் அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் உயிர் பிழைத்து, உடல்நிலை தேறி வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
🐆 A snow leopard attacks a skier in North China. These sorts of attacks are extremely rare since Snow Leopards tend to avoid people. Reasons for the attack are unknown pic.twitter.com/Zvl5x94255
— The Hakan_OTTOMAN..🇹🇷 (@Fener34King) January 26, 2026
இயற்கையிலேயே மிகவும் கூச்ச சுபாவம் கொண்ட பனிச்சிறுத்தைகள், மனிதர்களைக் கண்டால் விலகிச் செல்லும் குணம் கொண்டவை. ஆனால், அவை அச்சுறுத்தப்படுவதாக உணரும்போது ஆக்ரோஷமாகத் தாக்கக்கூடும் என வனவிலங்கு ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
உலகம் முழுவதும் மிக அரிய உயிரினமாக கருதப்படும் பனிச்சிறுத்தைகளின் எண்ணிக்கை தற்போது 4,000 முதல் 7,000 வரை மட்டுமே எஞ்சியுள்ளது குறிப்பிடத்தக்கது. வனப் பகுதிகளில் வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகளுக்கு அதிகாரிகள் மீண்டும் அறிவுறுத்தியுள்ளனர்.
