மஹாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள வைஜாபூர் தாலுகா ஷியூர் என்ற கிராமத்தில், சஞ்சய் பாகரே என்ற சாமியார் கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தி சிகிச்சை என்ற பெயரில் கிராம மக்களுக்கு கடும் வன்முறையைச் செய்து வந்திருப்பது அம்பலமாகியுள்ளது.
“பேய் பிடித்தவர்கள், திருமணமாகாதவர்கள் மற்றும் பிள்ளைகள் இல்லாத தம்பதிகளுக்கு தீர்வு அளிக்கிறேன்” என கூறி, தனது ஆகோரி சடங்குகளில் மக்கள் நம்பிக்கையை தவறாக பயன்படுத்தி மோசடியுடன் நடந்துகொண்டுள்ளார்.
அவரது சடங்குகளில், ஆண்கள் மற்றும் பெண்களை தடியால் அடித்தல், காலணியை வாயில் வைக்க சொல்லுதல், கோவிலைச் சுற்றி பலமுறை ஓடவைத்தல், மர இலைகளை உணவாக கொடுத்தல் போன்றவை இடம்பெற்றுள்ளன.
மேலும் சஞ்சய் பாகரே தனது சிறுநீரை பக்தர்களிடம் குடிக்க வைப்பது ஒரு பக்திசார் சிகிச்சை எனக் கூறி, மனித மரியாதையை அவமதிக்கும் வகையில் நடந்துள்ளார். இந்த செயல்கள் பதிவு செய்யப்பட்டு தற்போது அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோக்களில், தரையில் விழுந்திருக்கும் ஒருவரின் முகத்தில் காலால் மிதித்த பாபா, , மஞ்சள் தூள் தூவியதும், தடியால் அடித்ததும் மற்றும் அவரை நெஞ்சிலும் முதுகிலும் பலமுறை தாக்கியதும் தெளிவாக பதிவாகியுள்ளன.
இதையடுத்து, ஆர்வலர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு, சஞ்சய் பாகரே மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மஹாராஷ்டிரா கருப்பு மந்திரம் மற்றும் புனைநம்பிக்கை எதிர்ப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பாபா கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “இதுபோன்ற அமானுஷ்யமான செயல்கள் இன்னும் சில பகுதிகளில் நடந்து கொண்டிருக்கின்றன. அரசு மற்றும் காவல்துறைகள் விழிப்புடன் செயல்பட்டு, இத்தகைய நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும்” எனக் கேட்டுள்ளனர்.
