கர்நாடகா மாநிலம் விஜயப்புரா மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் ஒருவர், வேலைக்கு வரவில்லை என்பதற்காக சங்கிலியால் கட்டி வைத்து சித்ரவதை செய்யப்பட்ட சம்பவம், அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வர, போலீசார் விசாரணை நடத்தி இருவரை கைது செய்துள்ளனர்.
விழியப்புரா மாவட்டம் சடசனா தாலுகா கொடிஹால் கிராமத்தை சேர்ந்த பாஷா சாப் (வயது 38). இவர், குமார் பீராதார என்ற நபரிடம் வேலை கேட்டு சென்ற போது, அவருக்கு டிரைவர் வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டதுடன், முன் பணமாக ரூ.20 ஆயிரம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், பாஷா சாப் கூறியபடி வேலைக்கு செல்லாமல், தொடர்ந்து பல தடவைகள் நேரில் வருவதாக கூறி தள்ளிப் போட்டுள்ளார். பின்னர் கைப்பேசி அழைப்புகளுக்கும் பதிலளிக்காமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குமார், தனது நண்பர் ஸ்ரீசைலாவுடன் இணைந்து, பாஷா சாப்பை மோட்டார் சைக்கிளில் ஹத்தள்ளி கிராமத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு பணத்தை திருப்பி கேட்கும் போது, பாஷா சாப் பணம் இல்லையென கூறியதால், இருவரும் அவரை இரும்பு கம்பியில், காலில் சங்கிலியால் கட்டி வைத்துள்ளனர். மேலும், அவரை ஆபாசமாக திட்டியும், அடித்தும் சித்ரவதை செய்தனர்.
இந்த சோகம் தரும் காட்சிகளை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதால், இது பெரும் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், சடசனா போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் பாஷா சாப்பை சங்கிலி கட்டி வைத்து சித்ரவதை செய்ததாக, குமார் மற்றும் ஸ்ரீசைலா ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து விஜயப்புரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லட்சுமண் நிம்பரகி கூறியதாவது, “சம்பவம் குறித்து நடவடிக்கை எடுத்து 2 பேரை கைது செய்துள்ளோம். மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். இந்த சம்பவம் கர்நாடகா முழுக்க கோபம் மற்றும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
