தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வருகை புரிவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் முன்னதாகவே அவைக்கு வந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் உட்கார்ந்து விட்டனர். எடப்பாடி வந்த பிறகு தான் ஓ. பன்னீர்செல்வம் அவைக்கு வந்தார். ஓ. பன்னீர்செல்வம் எடப்பாடி அருகே சென்று அமர்ந்து கொண்டார். ஆனால் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை.

அதன் பிறகு ஆளுநர் உரையாற்றிய போது திமுக கூட்டணி கட்சிகளான விசிக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் மதிமுக போன்றவைகள் முழக்கங்கள் எழுப்பி  அவையை புறக்கணித்த நிலையில் அதிமுகவினர் மட்டும் எதுவுமே சொல்லவில்லை. அமைதியாக ஆளுநரின் முறையை அதிமுகவினர் கவனித்தனர். எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவராக நியமித்த ஆர்.பி உதயகுமார் நீல நிற உடையில் அவைக்கு வருகை புரிந்திருந்தார். அவருக்கு எதிர்க்கட்சித் தலைவருக்கான இருக்கை ஒதுக்கப்படாததன் காரணமாக அதிமுக எம்எல்ஏக்கள் அமர்ந்திருந்த இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டார். மேலும் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அவையில் அருகருகே அமர்ந்திருந்தது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.