ஐபிஎல் 2026 தொடரின் 24-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் மும்பை இந்தியன்ஸ் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, குயின்டன் டி காக்கின் அபார சதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது. இவ்வளவு பெரிய இலக்கை நிர்ணயித்த போதிலும், மும்பை அணியால் அதைத் தக்கவைக்க முடியவில்லை. பஞ்சாப் அணியின் பிரப்சிம்ரன் சிங் மற்றும் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்தத் தோல்வியின் போது மைதானத்தில் நிலவிய பதற்றம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிய ஹர்திக் பாண்டியா, ஃபீல்டிங்கின் போது மிகுந்த கோபத்துடன் காணப்பட்டார். பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பஞ்சாப் வீரர்கள் ரன்களைக் குவித்தபோது, ஃபீல்டிங் அமைப்பதில் அதிருப்தி அடைந்த பாண்டியா, சீனியர் வீரரான ஜஸ்பிரித் பும்ராவை நோக்கி ஆக்ரோஷமாக கத்திய வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
🚨 HEATED ARGUMENT BETWEEN HARDIK PANDYA AND JASPRIT BUMRAH FOR FIELD PLACEMENT 🚨
When Jasprit Bumrah bowling, Hardik Pandya was seen giving suggestions to him and setting the field according to himself, not according to Bumrah.
Jasprit Bumrah argued once but later surrendered… pic.twitter.com/kXouus6xJE
— Cricket Central (@CricketCentrl) April 16, 2026
பும்ராவின் பதிலடியும், பாண்டியாவின் இந்தச் செயலும் அணியில் ஒற்றுமை இல்லையோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. குறிப்பாக, நடப்பு சீசனில் கடந்த 5 போட்டிகளாக பும்ரா ஒரு விக்கெட் கூட வீழ்த்தாதது அணிக்கு கூடுதல் பின்னடைவாக அமைந்துள்ளது. இந்தச் சம்பவத்தின் போது முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவும் மிகுந்த அதிருப்தியுடன் காணப்பட்டார்.
2026 ஐபிஎல் தொடரில் மும்பை அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தொடர்ச்சியாக 4 தோல்விகளைச் சந்தித்துள்ள அந்த அணி, புள்ளிப் பட்டியலில் 9-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமெனில், மீதமுள்ள போட்டிகளில் மும்பை அணி அசுர பலத்துடன் மீண்டு வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
