பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரும், பெஷாவர் சால்மி அணியின் கேப்டனுமான பாபர் அசாம், டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளார்.பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரில் கடந்த 15-ஆம் தேதி கராச்சியில் நடைபெற்ற போட்டியில், குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிராக பெஷாவர் சால்மி மோதியது. 155 ரன்கள் என்ற இலக்கை துரத்திய பெஷாவர் அணியில், அதிரடியாக விளையாடிய பாபர் அசாம் 51 பந்துகளில் 71 ரன்கள் விளாசினார்.
இந்த இன்னிங்ஸ் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் (சர்வதேச போட்டிகள் மற்றும் உள்ளூர் லீக் தொடர்கள் உட்பட) 100 அரைசதங்களை பூர்த்தி செய்த உலகின் 3-வது பேட்ஸ்மேன் என்ற பெருமையை பாபர் அசாம் பெற்றுள்ளார். இதற்கு முன் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் மற்றும் இந்தியாவின் விராட் கோலி மட்டுமே இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.
இந்தச் சாதனையின் மூலம் டி20 கிரிக்கெட்டில் 100 அரைசதங்கள் அடித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். மேலும், ஆசிய அளவில் விராட் கோலிக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தையும் பாபர் அசாம் பிடித்துள்ளார். ஐபிஎல் தொடரில் விராட் கோலி ரன் மழை பொழிந்து வரும் அதே வேளையில், பாகிஸ்தான் மண்ணில் பாபர் அசாம் படைத்துள்ள இந்தச் சாதனை கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
