இந்திய கிரிக்கெட் வாரியத்தால் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டு, தற்போது லண்டனில் வசித்து வரும் ஐபிஎல் முன்னாள் கமிஷனர் லலித் மோடி, இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனுடன் நடத்திய நேர்காணலில் ஒரு அதிரடி தகவலை வெளியிட்டுள்ளார். 2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு பிறகு, வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியின் ஒரு வீரர் தனது ‘சாம்பியன்’ மெடலையும், இந்திய அணியின் ஒரு வீரர் தனது ‘ரன்னர்-அப்’ மெடலையும் தனக்கு பரிசாக வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஐபிஎல் போன்ற பிரம்மாண்ட லீக்கை தொடங்கி, தங்களுக்கு மிகப்பெரிய வாழ்வாதாரத்தை அமைத்துக்கொடுத்ததற்கு நன்றிக்கடனாகவே அந்த வீரர்கள் இந்த மெடல்களை கொடுத்ததாக லலித் மோடி உரிமையுடன் கூறியுள்ளார். மணி லாண்டரிங் மற்றும் வரி ஏய்ப்பு போன்ற பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி, இந்திய அரசால் தேடப்படும் ஒரு நபருக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கௌரவமிக்க மெடல்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த இரண்டு வீரர்கள் யார் என்ற பெயர்களை அவர் வெளியிடாதது தற்போது பெரும் மர்மத்தையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
