“மக்கள் பிரதிநிதிகள் அல்லாத தவெகவினர் யாரும் அரசு விவகாரங்களில் தேவையின்றித் தலையிடக் கூடாது; தங்களின் எல்லை என்ன என்பதை அறிந்து அவர்கள் விவேகத்துடன் செயல்பட வேண்டும்” என்று தவெக பொதுச்செயலாளரும், அமைச்சருமான என். ஆனந்த் மிகக் கறாரான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
சமீபத்தில் தென்காசி மற்றும் தாம்பரம் அரசு மருத்துவமனைகளுக்குள் தவெக கட்சியினர் திடீரென புகுந்து ஆய்வுகளை மேற்கொண்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கட்சி நிர்வாகிகளுக்கு இந்த அதிரடி அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் அரசு சார்ந்த பணிகளிலோ, மருத்துவமனை போன்ற பொது இடங்களிலோ தன்னிச்சையாக ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது என்று குறிப்பிட்ட அவர், இத்தகைய செயல்கள் புதிய அரசுக்குக் கலங்கத்தை ஏற்படுத்திவிடும் என்பதால் கட்டுக்கோப்பை மீறுபவர்கள் மீது கடுமையான ஆக்ஷன் (Action) பாயும் என்றும் எச்சரித்துள்ளார்.
தவெக அமைச்சரவை அமைந்த சில நாட்களிலேயே கட்சியின் பொதுச்செயலாளரே சொந்தக் கட்சித் தொண்டர்களுக்குப் போட்ட இந்த அதிரடி ‘செக்’, கோட்டை வட்டாரத்தில் பெரும் ‘பகீர்’ சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
