“திமுக ஆட்சிக் காலத்தில் சனாதனம் மற்றும் வந்தே மாதரம் ஆகியவற்றை வைத்து மட்டுமே அரசியல் செய்தார்கள்; புதிய தவெக அரசு இந்த அரசியல் சூழ்ச்சியில் பலியாகிவிடக் கூடாது” என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எச்சரித்துள்ளார்.

கோவையில் நடைபெற்ற பாஜக மாநில மையக்குழுக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்தத் தீயசக்தியை எதிர்த்துப் போராடுவதாகக் கூறினார்களோ, அதே சக்திகளுடன் சேர்ந்து தவெக ஆட்சி அமைத்திருப்பதாகக் கடுமையாகச் சாடினார்.

பல மாநிலங்களில் புறக்கணிக்கப்பட்டு, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான காங்கிரஸ் கட்சி, தற்பொழுது புறவாசல் வழியாகத் தமிழக அமைச்சரவையில் நுழைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கம்யூனிஸ்டுகளும் காங்கிரசும் தங்களின் தனித்தன்மையை முடக்காதவாறு தவெக மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மேலும், தேசபக்திப் பாடலான வந்தே மாதரத்தைக் கட்டாயமாக்கும் மத்திய அரசின் சுற்றறிக்கை நாட்டுக்கான வழிமுறை என்பதால், தமிழக அமைச்சர்கள் அதை எவ்விதக் காரணமும் கூறாமல் கட்டாயம் பின்பற்றித்தான் ஆக வேண்டும் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கறாராகத் தெரிவித்துள்ளார்.