தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று காலை விஸ்தரிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக கூட்டணியில் இருந்து கொண்டு தவெக அமைச்சரவையில் விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகள் இடம்பெற்றுள்ளதை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மிகக் காரசாரமாக விமர்சித்துள்ளார்.

முன்னதாக, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்ற தங்களின் நீண்ட நாள் கோரிக்கையின் படி, தவெக அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இணைவதாகவும், அதன் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராகப் பதவியேற்பார் என்றும் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அதேபோல், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஷாஜகான் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இன்று காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பொறுப்பேற்றுக் கொண்டார். “அதிகாரப் பகிர்வு என்ற விசிகவின் கனவு தற்பொழுது நினைவாகி உள்ளது” என வன்னியரசு நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையே, திமுக கூட்டணியில் தேர்தலைச் சந்தித்துவிட்டு தற்பொழுது தவெக அமைச்சரவையில் விசிக கைகோர்த்துள்ளதைக் கடுமையாகச் சாடியுள்ள திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தனது எக்ஸ் (X) பக்கத்தில், “முன் ‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’ மூட சாதியை நொறுக்க வேண்டிய ‘சிறுத்தையும்’ வெறும் ‘விசில்’ சத்தத்திற்கு முட்டுக் கொடுக்குமென்றால்; பூ முடித்தவனை புறந்தள்ளி — புணர்ச்சிக்கு வேறிடம் தேடுவதில் தவறில்லை!” என்று எவ்வித சமரசமுமின்றி மிகக் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

மேலும், “பெரியாரின் ‘காலதேச வர்த்தமான’ த்திற்கு காத்திருப்போம்; என்றாலும் களமாடுவோம்; வெற்றி நமக்கே!” என்று அவர் குறிப்பிட்டுள்ள அரசியல் கணக்கு, தவெக மற்றும் விசிக கூட்டணிக் வட்டாரங்களில் பெரும் ‘பகீர்’ சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.