கடந்த 2015 -ஆம் ஆண்டு சென்னை போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக முதன்முதலாக மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் விமான நிலையம், பரங்கிமலை மற்றும் விம்கோ நகர் வரை இருநிற வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஓராண்டாக அதிகரித்துள்ளது. தினம் தோறும் ஏராளமான மக்கள் மெட்ரோ ரயில் பயணம் செய்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் அலுவலகம் செல்பவர்களும், வீடு திரும்புபவர்களும் அதிக அளவில் மெட்ரோ ரயிலில் பயணிப்பதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கூடுதல் ரயில்களை இயக்க தொடர்ந்து பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது மூன்று பொதுப் பெட்டிகள் மற்றும் ஒரு பெண்கள் பெட்டி என மொத்தம் நான்கு பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் கூடுதலாக இரு பெட்டிகளை இயக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறித்த சாத்தியக் கூறுகளை ஒரு மாதத்திற்குள் ஆராய்ந்து அறிக்கை அளிக்க வல்லுனர் குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.