சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள கணபதி ராஜ் பகுதியில் ஒரு வீடு இரண்டு நாட்களாக பூட்டப்பட்ட நிலையில் கிடந்தது. இந்த வீட்டிலிருந்து திடீரென கடுமையான துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியில் இருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தபோது முன்பக்க கதவு பூட்டி கிடந்தது. இதனால் அவர்கள் பின்பக்க கதவு வழியாக உள்ளே சென்று பார்த்தனர். அப்போது தலையில் வெட்டு காயங்களுடன் ஒருவர் சடலமாக கிடந்தார். அவருக்கு சுமார் 40 வயது இருக்கும் நிலையில் அவர் கொலை செய்யப்பட்டு இரண்டு நாட்கள் ஆகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அவருடைய உடல் அழுகிய நிலையில் அந்த வீட்டில் கிடந்தது. உடனடியாக அவரின் உடலை மீட்டு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் வெங்கடேசன் என்றும் அவர் ஒரு வழக்கறிஞர் என்றும் தெரியவந்தது. இவர் அந்த வீட்டில் தன்னுடைய நண்பர் சேதுபதி என்பவருடன் சேர்ந்து வாடகைக்கு தங்கி இருந்தார். தற்போது அவர் சடலமாக கிடக்கும் நிலையில் அவருடைய நண்பர் சேதுபதி தலைமறை வாகி விட்டார். மேலும் சேதுபதி தலைமறைவான நிலையில் அவர் பிடிபட்டால் கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.