சென்னை அடையாறு அருகே வண்ணாந்துறை பகுதியில் தமிழக வெற்றிக் கழக  நிர்வாகியான கண்ணன் (45) என்பவரை மர்ம நபர்கள் ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றிரவு நடந்த இந்த திடுக்கிடும் சம்பவத்தில், முன்விரோதம் காரணமாகவே இந்தக் கொலை நடந்திருக்கலாம் என காவல்துறை முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கிறது. சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல் துறையினர், கொலையாளிகளைப் பிடிக்க உடனடியாக 3 தனிப்படைகளை அமைத்துத் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதனிடையே, தனிப்படை நடத்திய அதிவிரைவு நடவடிக்கையில், கொலையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் அதே பகுதியைச் சேர்ந்த 5 நபர்களைப் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்துக் கைது செய்துள்ளனர்.

கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற சிவா என்பவரின் கொலை வழக்குக்கு , பழிக்குப்பழியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் ரகசிய இடத்தில் வைத்துப் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கட்சி நிர்வாகி கொடூரமான முறையில் கொல்லப்பட்ட செய்தி தவெக தொண்டர்களிடையேயும் கட்சித் தலைமை மட்டத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.