திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நிகழ்ந்த ஒரு கோரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர் இல்லாத மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியை, பள்ளி கட்டடத்திற்கு அழைத்துச் சென்று 4 பள்ளி மாணவர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
அதாவது அந்த பகுதியில் வசித்து வருபவர் 16 வயது சிறுமி. பெற்றோர் இல்லாத இந்தச் சிறுமி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆவார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 4 சிறுவர்கள் அந்தச் சிறுமியைச் சதி செய்து, அப்பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ஒரு பள்ளி கட்டடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து அந்த 4 சிறுவர்களும் சேர்ந்து சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்தியுள்ளனர்.
இதனைத் தாங்க முடியாத அந்தப் பாதிக்கப்பட்ட சிறுமி, அருகில் இருந்த பொதுமக்களிடம் சென்று கதறி அழுது கூறியுள்ளார். சிறுமையின் நிலைகண்டும், அவர் கூறிய அதிர்ச்சிகரமான தகவலைக் கேட்டும் உறைந்துபோன அப்பகுதி பொதுமக்கள், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட கோட்டை போலீசார், அந்த 4 சிறுவர்களையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது, அவர்கள் தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, அந்த 4 சிறுவர்கள் மீதும் போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட நான்கு சிறுவர்களையும் தஞ்சாவூர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், கைது செய்யப்பட்ட அந்த நான்கு பேரும் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
சமீப காலமாக அந்தப் பகுதியில் உள்ள சில சிறுவர்கள் போதை மாத்திரை மற்றும் கஞ்சா போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையாகி இது போன்ற கொடூரச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
