ஆஸ்திரேலியாவின் முன்னாள் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் ஹைடன், இது ஒருநாள் போட்டி என்று சூர்யாவிடம் சொன்னால் அதிரடியை நிறுத்தலாம் என கிண்டலாக கூறியுள்ளார்.

2023 ஒரு நாள் உலகக் கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வடைந்து சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது. இந்த போட்டியில் சூர்ய குமார் யாதவ் கடைசி கட்டத்தில் 28 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே எடுத்திருப்பார். இதனால் சமூக வலைதளங்களில் சூர்யா கடும் விமர்சனங்களுக்கு ஆளானார்.. முன்னாள் வீரர்களும் இதுகுறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அவர் பேட்டிங்கில் சிரமப்பட்டது அப்படியே தெரிந்தது என்றும், மைதானத்தின் தன்மை அப்படியா? அல்லது ஒரு நாள் போட்டி என்பதால் சூர்யா தடுமாறுகிறாரா? என பலரும் விவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த சூழலில் இந்த தோல்விக்கு பின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதன்படி உலக கோப்பை முடிந்து 3 நாட்களுக்கு பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. உலகக் கோப்பையில் சூர்யகுமார் யாதவ் 7 போட்டிகளில் 17.66 என்ற சராசரியில் 106 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக 42 பந்தில் 80 ரன்கள் குவித்து அசத்தினார். ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்கி 3 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 19.5 ஓவரில் 209 ரன்கள் என்ற இலக்கை எட்டியது. இந்த போட்டியில் சூர்யகுமார் (80) இஷான் கிஷானுடன் 112 ரன் பார்ட்னர்ஷிப்பைப் பகிர்ந்து கொண்டார். இந்தியா 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்த போட்டியின் போது, ​​முன்னாள் இந்திய பயிற்சியாளரும், வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி , சூர்யகுமாரைப் பாராட்டினார், மேலும் அவரது சக வர்ணனையாளரும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரருமான மேத்யூ ஹைடனிடம், சூர்யகுமார் யாதவ் இவ்வளவு பெரிய ஃபார்மில் இருக்கும்போது யாரால் எப்படி தடுக்க முடியும் என்று கேட்டார். பதிலுக்கு, ஹைடன் சூர்யகுமார் யாதவை வேடிக்கையாக ட்ரோல் செய்தார்.

ஆஸ்திரேலியாவின் முன்னாள் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் ஹைடன், இது ஒருநாள் போட்டி என்று யாராவது அவரிடம் (சூர்யா) சொல்ல வேண்டும் என்று கூறினார்.

சாஸ்திரிக்கும் ஹேடனுக்கும் இடையே நடந்த உரையாடல் எப்படி நடந்தது:

சாஸ்திரி கேட்டார் : “சூர்யகுமார் யாதவ் இந்த டாப் ஃபார்மில் இருக்கும்போது அவரை எப்படி நிறுத்துவது?”

ஹைடன் பதிலளித்தார்: “இது ஒரு ஒருநாள் போட்டி என்று அவரிடம் சொல்லுங்கள்”

பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தரும் இரண்டு முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு இடையேயான உரையாடலைப் பகிர்ந்து கொண்டார் மற்றும் சிரிக்கும் எமோஜிகளுடன் பதிலளித்தார்.