9ஆம் வகுப்பில் புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் முறை அடுத்த ஆண்டு அமலுக்கு வருவதாக சிபிஎஸ்இ அறிவிப்பு

மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE) 2026-27 கல்வியாண்டு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு திறந்த புத்தக மதிப்பீடுகள் (Open Book Assessments) முறையை அறிமுகப்படுத்துகிறது.

தேசிய கல்விக் கொள்கை (NEP) அடிப்படையில் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரும் CBSE, மாணவர்கள் பாடப்புத்தகங்கள், வகுப்பு குறிப்புகள், அங்கீகரிக்கப்பட்ட வளங்களை பார்த்து தேர்வு எழுதும் வகையில் இந்த திட்டத்துக்கு நிர்வாகக் குழுவின் ஒப்புதலை வழங்கியுள்ளது. புதிய நடைமுறையின் கீழ், ஒவ்வொரு பருவத்திலும் மொழி, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட முக்கிய பாடங்களில் எழுத்துத் தேர்வுகள் நடத்தப்படும்.

இந்த திட்டம், மனப்பாட முறையை குறைத்து திறன் அடிப்படையிலான கற்றலை ஊக்குவிப்பது என்பதையே பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது. மாணவர்கள் கருத்துகளை ஆழமாகப் புரிந்து, நிஜ வாழ்க்கைச் சூழ்நிலைகளில் அறிவைப் பயன்படுத்தும் திறனை வளர்க்கும் வகையில் CBSE வழிகாட்டுதல்கள், மாதிரி வினாத்தாள்கள், விரிவான பயிற்சிகளை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.