பெங்களூருவின் பழைய சந்தாபுரா ரயில்வே பாலம் அருகே  இன்று (புதன்கிழமை) காலை பீதி ஏற்படுத்தும் வகையில் ஒரு சூட்கேஸ் கண்டெடுக்கப்பட்டது.

உள்ளூர்வாசிகள் சந்தேகத்துடன் போலீசாருக்கு  தகவல் அளித்ததைத் தொடர்ந்து, அந்த சூட்கேஸை திறந்த போலீசார் அதில் ஒரு பெண்ணின் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இச்சம்பவம் அ ப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் பெண் வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு, பின்னர் சடலம் சூட்கேஸில் அடைக்கப்பட்டு ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் சடலத்தில் எந்த அடையாள ஆவணங்களும், தனிப்பட்ட உடைமைகளும் இல்லை என தெரிவித்த போலீசார், அந்த பெண்ணின் பெயர், வயது மற்றும் பிற விவரங்களை கண்டறிய தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சடலத்துக்கு குறைந்தது 18 வயதுதான் இருக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளனர். மேலும், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். “சூட்கேஸ் ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்டிருக்க வாய்ப்பு அதிகம். இது பொதுவாக ரயில்வே போலீசாரின் புலனாய்வு வரம்பிற்குள் வந்தாலும், சம்பவ இடம் எங்கள் பகுதியில் வந்துள்ளதால் நாங்களும் இதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்,” என கிராமப்புற காவல் கண்காணிப்பாளர் சி.கே.பாபா தெரிவித்தார்.

இதேபோன்று கடந்த மார்ச் மாதத்தில், பெங்களூருவில் ஹுலிமாவு பகுதியில் 32 வயதுடைய கௌரி சம்பேகர் என்ற பெண்ணின் சடலம் சூட்கேஸில் அடைக்கப்பட்டு அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டது.

அவரது கணவர் ராகேஷ் சம்பேகர் புனேவில் கைது செய்யப்பட்டார். அவர் தனது மனைவியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த இந்த தம்பதி கடந்த ஜனவரி மாதம் பெங்களூருக்கு குடிபெயர்ந்திருந்தனர். ராகேஷ் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.. அவர்களுக்குள்  ஏற்பட்ட பிரச்சனை முற்றிய நிலையில் கொலை நடந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.