தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் பொதுவாக சுற்றுலா தலங்களுக்கு பெயர் போனது. அங்குள்ள விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை காண தினம் தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வந்து செல்லும் பயணிகள் பயன்பெறும் விதமாக அனைத்து சுற்றுலா தளங்களையும் இணைத்து அரசு போக்குவரத்து கழக பேருந்து இயக்கப்பட வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சிவாலயதனத்தை முன்னிட்டு 12 சிவன் கோவில்களை இணைத்து மார்த்தாண்டத்தில் இருந்து சிறப்பு பேருந்து இயக்கியது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் அடுத்த கட்டமாக குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை இணைத்து அரசு பேருந்து இயக்க தமிழக அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாத்தூர் தொட்டி பாலம், திற்பரப்பு அருவி, சுசீந்திரம்,பத்மநாதபுரம் அரண்மனை மற்றும் பேச்சுப் பாறை அணை போன்ற சுற்றுலா தலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 50 பயணிகள் முன்பதிவு செய்யும் பட்சத்தில் தங்களின் ஊரிலிருந்து பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப் பேருந்துகளில் முன்பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 9487599082, 9487599085,  9487599087 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதில் பயணம் செய்ய ஒரு நபருக்கு 300 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.